
பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு நான் மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை என இன்று (ஜன.31) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
வடசென்னை பகுதியில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் `வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்’ கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை இன்று காலை நேரில் ஆய்வுசெய்தார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
`சென்னை மாநகராட்சியின் மேயராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது இதே வடசென்னை பகுதிக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்தினேன். குறிப்பாக எங்கெங்கு போக்குவரத்து நெரிசல்கள் இருந்ததோ அங்கெல்லாம் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றக்கூடிய வகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டோம்.
இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்றதும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்காக ரூ. 1000 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி, கிட்டத்தட்ட ரூ. 6350 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்துவருகின்றன. மொத்தமாக 252 பணிகள் நடைபெறுகின்றன.
ஓராண்டிற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். வடசென்னையைப் பொறுத்தவரையில், இது வளர்ந்த சென்னையாக ஓராண்டுக்குள் உருவாகும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. அது தொடர்பான பணிகளை இன்று நான் மேற்பார்வையிட்டுள்ளேன்’ என்றார்.
இதனை அடுத்து பெரியார் மீதான விமர்சனங்கள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,
`பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு நான் மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை. பெரியார்தான் எங்கள் தலைவர். எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார். எனவே அவற்றையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தத் தயாராக இல்லை’ என்றார்.