
20 ஆண்டு காலம் திமுகவுக்காக ஸ்டாலின் உழைத்துள்ளதை நான் மறுக்கவில்லை, ஆனால் கருணாநிதி குடும்பத்தின் அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு, உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது எனப் பேசியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இன்று (நவ.3) காலை சேலம் மாவட்டம் வீரப்பம்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியவை பின்வருமாறு:
`உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியிருக்கிறார் என்றால், அக்கட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்கியிருக்கிறது என்று அர்த்தம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலினை வளர்க்க கட்சியில் பல்வேறு முயற்சி எடுத்தார். 20 ஆண்டு காலம் அக்கட்சிக்காக ஸ்டாலின் உழைத்துள்ளார் அதை நான் மறுக்கவில்லை.
ஆனால் கட்சிக்காகப் பாடுபடாமல், திமுக என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு, கருணாநிதி குடும்பத்தின் அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு, உதயநிதிக்கு துணை முதல்வராக பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் குடும்பம் என்ன மன்னர் பரம்பரையா?
ஏற்கனவே இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டுவிட்டது. இனி தமிழகத்தில் மன்னராட்சி முறை ஒரு போதும் எடுபடாது. அதை மக்களும் அனுமதிக்கமாட்டார்கள். அத்துடன் திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும்.
தன்னுடைய மகனைப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வைத்து மக்களிடையே ஈர்ப்பை உண்டாக்க எவ்வளவோ முயற்சி செய்கிறீர்கள். ஒரு முயற்சியும் எடுபடாது. மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு கொண்டவர்கள்’ என்றார்.