அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சரிடம் மன்னிப்புக் கோரும் காணொளியை நான் வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் என்னைப் பலிகடா ஆக்கிவிட்டனர் என்று பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சதீஷ் சன் செய்திகளுக்குப் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக சதீஷ் பேசியவை பின்வருமாறு:
`கடந்த 20 வருடங்களாகக் கட்சிப் பொறுப்பில் இருக்கிறேன். இதுவரை என் மீது எந்த ஒரு சிறிய குற்றச்சாட்டு கூட இருந்ததில்லை. அன்னபூர்ணா நிர்வாகத் தலைவர் சீனிவாசன் நிதியமைச்சரிடம் மன்னிப்புக்கோரும் காணொளி வெளியானது சம்மந்தமாக என்னைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டனர்.
அந்த மன்னிப்புக்கோரும் நிகழ்வு தனிப்பட்ட முறையில்தான் நடந்தது. நிதியமைச்சர், வானதி சீனிவாசன், அன்னபூர்ணா சீனிவாசன், மாவட்டத் தலைவர் என மொத்தமே அங்கு நான்கு நபர்கள் மட்டுமே இருந்தனர். காணொளியில் மூன்று நபர்கள் இருந்தனர், மாவட்டத் தலைவர் இல்லை.
இது குறித்து எனக்கு வந்த குறுந்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள நான் அதை இன்னொரு நபருக்கு அனுப்பி, அது பற்றிக் கேட்டேன். ஆனால் கட்சிக்கு விரோதமாக நடந்துகொண்டதாக என்னைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். நான் செய்தது கட்சி விரோத நடவடிக்கை என்றால் இந்தக் காணொளியை யார் வெளியிட்டார்கள்? காணொளியை வெளியிட்டவர் மீது இதே போல நடவடிக்கை எடுப்பார்களா?
அதே போல, என் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்பியதும் அவரிடம் நிரூபிக்கவுள்ளேன். அதன் பிறகு கட்சி பணியில் ஈடுபடுவேன். இந்த விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மாவட்டத் தலைவர் அவர் மீது வரக்கூடிய குற்றச்சாட்டை என் மீது போட்டு அவர் தப்பிப்பதற்காக என்னை பலிகடா ஆக்கிவிட்டார். என்னை நீக்குவதற்கு முன்பு எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை.
இங்கு நடந்தத் தவறால் மாநிலத் தலைவருக்குத் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத் தலைவர்தான் அந்தக் காணொளியை வெளியிட்டிருப்பார். அவர் மீதும் நடவடிக்கையெடுக்க வேண்டும். இது தொடர்பாக ஐந்து பேர் கொண்ட கட்சி ஒருங்கிணைப்புக்குழுவிடம் நான் விளக்கமளிப்பேன்’.