
தானும் அஜித் ரசிகர் தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் அமமுக நிகழ்ச்சியில் ரசிகர்கள் 'கடவுளே அஜித்தே' என்று எழுப்பிய முழக்கம் கவனம் பெற்றது. மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் இதுகுறித்து விளக்கமளித்தார்.
"திருப்பூரில் மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு எங்களுடையக் கட்சி சார்பில் பரிசு கொடுக்கச் சென்றிருந்தேன். அப்போது பேசிவிட்டு பரிசு கொடுக்கலாம் என்றார்கள். பள்ளி மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
நான் பேச முயன்றபோது அனைவரும் கோஷம் எழுப்பினார்கள். ஆனால், அவர்கள் எழுப்பிய கோஷம் என் காதுகளில் விழவில்லை. அருகிலிருந்து செயலாளரிடம் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டேன். 'கடவுளே அஜித்தே' என்று சொல்வதாகச் செயலாளர் கூறினார்.
இதுகுறித்து விசாரித்தபோது, தற்போது சமூக ஊடகங்களில் இது டிரெண்டாகி வைரலாகியிருப்பதாகக் கூறினார்கள்.
இதன்பிறகு, அமைதியாக இருக்குமாறு கூறினார்கள். மாணவர்களும் அமைதியாக இருந்தார்கள்.
இதைக் கண்டு நான் அதிர்ச்சியடையவில்லை. அதிர்ச்சி அடைவதற்கு இதில் எதுவும் இல்லை. நானும் அஜித் ரசிகன் தான். எனக்கும் அஜித்தைப் பிடிக்கும். நிறைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போது, அஜித் குமார் என்று பெயர் சூட்டியுள்ளேன்.
ஒரு நடிகராக அஜித்தை எனக்குப் பிடிக்கும் என பல பேட்டிகளில் நான் கூறியிருக்கிறேன். விஜயையும் எனக்குப் பிடிக்கும், அவரைப் பிடிக்காது என்றில்லை. சிவாஜி - எம்ஜிஆர், ரஜினி - கமல் என்பதுபோல அஜித், விஜய், விக்ரம், சூர்யா என யார் நடித்தாலும் நல்ல படங்களைப் பார்க்கப்போகிறோம்" என்றார் டிடிவி தினகரன்.