கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: தமிழக அரசு

மணிச்சுடர் இதழின் ஆசிரியரான காதர் மொகிதீன், இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்து வருபவர்.
கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: தமிழக அரசு
1 min read

2025-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் `தகைசார் தமிழர் விருது’, இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகைசால் தமிழர் விருது குறித்து தமிழக அரசால் இன்று (ஜூலை 4) வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,

‘தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்.

இந்த விருது கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, ஆசிரியர் கி. வீரமணி மற்றும் முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் தலைமையில் இன்று (4.7.2025) நடைபெற்றது.

இதில் மூத்த அரசியல் தலைவரும், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும், இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை பெருமைப்படுத்தும் வகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை அவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். மனித நேய மாண்பாளர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அறிவார்ந்த சொற்பொழிவாளர், மனிதநேயத்துக்கும் மதநல்லிணக்கத்துக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

கோவையில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், தமிழகத்துக்கும் அரபு நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர். எட்டாண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் 'தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?' எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர்.

வாழும் நெறி, குர்ஆனின் குரல், இசுலாமிய இறைக்கோட்பாடு உள்பட ஆறு நூல்களை எழுதியவர். மேலும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர், கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர், பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வை உயரத்துக்கு உயர்த்திய ஆசானும் ஆவார்.

தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு ரூ. 10 லட்சம் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வரும் ஆகஸ்ட் மாதம் 15 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in