ஹிந்து அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் செல்லத் தடை: மறுபரிசீலனை செய்யப்படுமா?

மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் உறுதிமொழி அளித்தால் அனுமதிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்ப்பட்டுள்ளது
ஹிந்து அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் செல்லத் தடை: மறுபரிசீலனை செய்யப்படுமா?
ANI
1 min read

பழனி முருகன் கோயிலுக்கு ஹிந்து அல்லாதவர்கள் செல்ல சில கட்டுப்பாடுகளை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள், உறுதிமொழி எடுத்துக்கொண்டு பின் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கலாம் என்றும் இதுகுறித்து அறிவிப்புப் பலகை வைக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். ஹிந்து அறநிலையத் துறை ஆலய நுழைவு விதி 1947 பிரிவின் படி ஹிந்து அல்லாத எவரும் கோயிலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட்டது. தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அனுமதி இல்லை என்பதைத் தெரிவிக்க அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. 

சமீபத்தில் அறிவிப்புப் பலகை நீக்கப்பட்டதால், அதை மீண்டும் வைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, அறிவிப்புப் பலகையை மீண்டும் வைக்க வேண்டும் எனவும் ஹிந்து அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இன்று வெளியான இறுதித் தீர்ப்பில், ஹிந்து அல்லாதவர்களை கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும், ஹிந்து அல்லாதவர்கள் மற்றும் ஹிந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் பதிவேடு வைக்க வேண்டும் என்றும், அதில் சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உறுதிமொழி அளித்தால் பின்னர் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்து அறநிலையத் துறை உத்தரவை பின்பற்றுமா அல்லது நீதிமன்றத்தை அணுகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in