சென்னையில் ரௌடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறை வடக்கு இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "சென்னை புளியந்தோப்பில் இன்று காலை சுமார் 4.30 மணியளவில் முல்லைநகர் பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது. காவல் துறையினர் ஒரு காரை வழிமறிக்கிறார்கள். இந்த காரில் இருவர் இருந்தார்கள்.
ஓட்டுநர் அருகே ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் ஒரு பை இருந்தது. காவல் துறையினர் அவரை வெளியே வரச் சொல்லியிருக்கிறார்கள். அவர் மறுத்திருக்கிறார். மேலும் வலியுறுத்தப்பட்ட பிறகு, அவர் வெளியே வந்தார். காவல் துறையினர் பையை பரிசோதனை செய்து பார்த்தார்கள். இதனிடையே, கார் ஓட்டுநர் காரை வேகமாக எடுத்து தப்பியோடினார். உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியைச் சேர்ந்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் இரவு ரோந்துப் பணியில் இருந்தபோது காரை பார்த்துள்ளார். இதைப் பாரத்து காரை விரட்டியுள்ளார்கள். அப்போது பிஎஸ்என்எல் குடியிருப்புப் பகுதியில் கார் மாட்டிக்கொண்டது.
காவல் ஆய்வாளர் கார் பின்னே சென்று அவரை விரட்டிப் பிடித்தது. காரிலிருந்து காவல் ஆய்வாளர் காரைவிட்டு இறங்கும்போது, அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
காவல் ஆய்வாளர் வெளியே வரும்போது, துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். காரை ஓட்டி தப்பிச் செல்ல முயன்றவர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால், காவல் ஆய்வாளரின் கார் சேதமடைந்தது. இதனால், காவல் ஆய்வாளர் பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நபர் காயமடைந்தார். கீழே விழுந்தவுடன் பரிசோதனை செய்ததில் இடதுமார்பில் காயம் ஏற்பட்டிருந்தது. அவரைப் பரிசோதித்ததில மூச்சு இருந்தது.
உடனடியாக காவல் ஆய்வாளர் தனது சொந்த அரசு வாகனத்தில் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அப்போது மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்கள்.
இதன்பிறகு, காவல் ஆய்வாளர் சம்பவ இடத்துக்குச் சென்றார். அங்கு விசாரித்ததில், வாகனத்தில் பெரிய பையில் கஞ்சா இருந்தது. பின்னாடி ஒரு பெரிய அரிவாள் இருந்தது.
இந்த விசாரணையின்போது தான், சம்பந்தப்பட்ட நபர் காக்கா தோப்பு பாலாஜி என்று அடையாளம் காணப்பட்டார். முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் இவர் மீது நிறைய வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இவர் தொடர்புடைய தகவல்களைச் சேகரித்ததில், இவர் மீது ஏறத்தாழ 58 வழக்குகள் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகள், 17 கொலை முயற்சி வழக்குகள், ஒரு கஞ்சா வழக்கு உள்ளது.
இதன்பிறகு, சம்பவம் தொடர்பாக சிறப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுமாதிரியான சம்பவங்களில் மாஜிஸ்திரேட் விசாரணை தேவை. இதற்காக விசாரணை அதிகாரி மாஜிஸ்திரேட்டுக்கு கோரிக்கை வைப்பார். அவர் விசாரணை நடத்துவார்" என்றார் காவல் துறை வடக்கு இணை ஆணையர்.