சென்னை ஆலந்தூரில் உணவகத்திற்குச் சீல் வைத்த விவகாரம்: சரவண பவன் விளக்கம் | Saravana Bhavan |

சரவண பவன் உணவகத்திற்கு இந்த பிரச்னையில் எந்த வகையிலும் தொடர்பு இல்லை...
சரவண பவன் உணவக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
சரவண பவன் உணவக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
2 min read

சென்னை ஆலந்தூரில் ரூ. 300 கோடி மதிப்பிலான அரசு நிலத்தில் செயல்பட்டு வந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் குறித்து சரவண பவன் உணவக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

சென்னை விமான நிலையம் அருகே ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் ரூ. 300 கோடி மதிப்பிலான 40,000 சதுர அடி கொண்ட அரசு நிலத்தில் சரவண பவன் உணவகம் செயல்பட்டு வந்தது. இதற்கிடையில் நிலத்தின் குத்தகைக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் இறங்கியது. இதனை எதிர்த்து உணவகத்தின் தரப்பில் ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், உணவகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து, அரசு நிலத்தை மீட்க வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் கடந்த அக்டோபர் 29 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். உணவகத்தின் நுழைவு வாயில்களை மூடி சீல் வைத்த அதிகாரிகள், பெயர் பலகையையும் அகற்றினர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து சரவண பவன் உணவகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

“சமீபத்திய செய்தி அறிக்கைகளின் அடிப்படையில், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் அருகே உள்ள எங்கள் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது குறித்து தெளிவான மற்றும் வெளிப்படையான விளக்கத்தை வழங்க விரும்புகிறோம்.

28-10-2025 அன்று, உள்ளூர் வருவாய் அதிகாரிகள்,மற்றும் அந்த சொத்தின் நில உரிமையாளருக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு குத்தகை நிலப் பிரச்னை தொடர்பாக நிர்வாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கையைத் தொடங்கினர். இந்த பிரச்னை நிலத்தின் உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர் தொடர்புடையது, மேலும், சரவண பவன் உணவகத்திற்கு இந்த பிரச்னையில் எந்த வகையிலும் தொடர்பு இல்லை.

இந்தக் கிளையில் எங்கள் செயல்பாடுகள் எப்போதும் சட்டபூர்வமானவை, வெளிப்படையானவை, என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். அமலாக்க நடவடிக்கை எங்கள் உணவகத்தின் செயல்பாடு குறித்து எடுக்கப்படவில்லை.

சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக, நாங்கள் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளோம், மேலும் உரிய நடைமுறைக்கு ஏற்ப தற்காலிகமாக வளாகத்தை காலி செய்துள்ளோம். இந்த விஷயம் நில உரிமையாளருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே சரியான நேரத்தில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த பிரச்னை ஒரு குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் ஒரு தற்காலிக இடையூறு மட்டுமே.

சென்னை, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள எங்கள் மற்ற அனைத்து கிளைகளும் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. பல வருடங்களாக ஓட்டல் சரவண பவன் அனுபவம், அரவணைப்பு, அக்கறை மற்றும் கலப்படம் இல்லாத தென்னிந்திய வடஇந்திய உணவுவகைகள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

எங்கள் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல ஆண்டுகளாக எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் பாசத்தை நாங்கள் மிகவும் மதிக்கின்றோம். சுத்தம், தரம், சேவை என்ற சரவண பவனின் தாரக மந்திரத்தை நிலைநிறுத்த உங்கள் ஆதரவு தொடர்ந்து எங்களை ஊக்குவிக்கின்றது.

சரவண பவனில், சவால்கள் தற்காலிகமானவை என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பு நிரந்தரமானது.

வாழ்க்கை தொடர்கிறது. எங்கள் சேவையும் அப்படித்தான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The Saravana Bhavan restaurant management has explained the issue of sealing a restaurant operating on government land worth Rs 300 crore in Alandur, Chennai.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in