
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இரு நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை அதிகளவில் பெய்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறவுள்ளதால், மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி
காரைக்கால்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
கடலூர்
திருவாரூர்
தஞ்சாவூர்
திருவள்ளூர்
விழுப்புரம்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
(இரவு 10.20 மணி நிலவரம்)