அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

"தமிழ்நாடு போராடியது... தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்..."
அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின்
1 min read

ஆளுநருக்கான அதிகாரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உட்பட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கவேண்டும். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ், குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்குகிறோம். சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது தொடர்பாக, மசோதா நிறைவேற்றப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் ஆளுநர்கள் முடிவு செய்யவேண்டும். சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் ஆளுநர்கள் முடிவு செய்ய வேண்டும்" என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது.

இந்தத் தீர்ப்பைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர் கூறியதாவது:

"அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். சற்று முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கிய சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார்.

அந்த நிலையில் அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறை சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அரசியல் சட்ட வரையறுத்திருந்தபோதிலும் இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததோடு தனக்கு அதில் அதிகாரம் இருந்ததாகவும் தெரிவித்து வந்தார்.

இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில், தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும் அந்தச் சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்றும் தெரிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்க் கொள்கையான மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடியது.

தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்..." என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in