
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்பட்ட தேர்வு ஆகியவற்றை மேற்கோள்காட்டி, ஹிந்தி திணிப்பில் மத்திய அரசு பட்டவர்த்தனமாக ஈடுபடுவதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்
மதுரையில் இன்று (ஆக. 26) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சு. வெங்கடேசன் பேசியதாவது,
`தெற்கு ரயில்வே வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை மத்திய பாஜக அரசால் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பட்டவர்த்தமான ஹிந்தி திணிப்பின் மற்றுமொரு அடையாளமாக இருக்கிறது.
தெற்கு ரயில்வே ஊழியர்களின் பதவி உயர்வுக்கான தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இடம்பெற்றிருக்கவேண்டும். கேள்விகள் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் சம்மந்தப்பட்ட மாநில மொழியில் இருக்கவேண்டும் என்பது அடிப்படையான விதி.
ஆனால் தெற்கு ரயில்வே நடத்திய பதவி உயர்வுக்கான அந்த தேர்வில் வினாத்தாள் என்பது ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டுமே இருந்தது, தமிழில் இல்லை. ஆனால் தேர்வு நடைபெற்று முடிந்துவிட்டது. இதற்கு எதிராக மத்திய ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன்.
உடனடியாக அந்த தேர்வு ரத்து செய்யப்படவேண்டும், தமிழிலும் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு புதிதாக தேர்வு நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். நிச்சயமாக அந்த தேர்வு ரத்து செய்யப்படும் என்ற முடிவு அடுத்த ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் அடுத்த சுற்றறிக்கை நேற்று (ஆக. 25) வெளியானது. ஹிந்தி பயிற்சி மற்றும் ஹிந்தியில் ஆளுமையை வளர்த்துக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி, உங்கள் ஹிந்தி அறிவு என்பது பதவி உயர்வுக்கான தகுதிகளில் ஒன்றாக கணக்கில் எடுக்கப்படும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
பட்டவர்த்தனமாக ஹிந்தி திணிப்பை மேற்கொள்வதற்கான மற்றுமொரு அடையாளம் இதுவாகும். ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது, குறிப்பாக மத்திய அரசின் ரயில்வே, அஞ்சல், வங்கி, காப்பீட்டு ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் வழியாக ஹிந்தியை திணிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.
மத்திய ஆட்சி மொழி சட்டத்தில் விலக்கு பெற்ற ஒரு மாநிலம் தமிழ்நாடு. எனவே மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கும் ஹிந்தி மொழி பிரிவுகள் உடனடியாக கலைக்கப்படவேண்டும் என்று நாம் கூறுகிறோம். இந்த சுற்றறிக்கையை தெற்கு ரயில்வே வாபஸ் பெறவேண்டும். இதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்’ என்றார்.