ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின்போது விரைவு சாமி தரிசனக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
1 min read

கோயில்களில் சாமி தரிசனத்துக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசனம் செய்வார்கள் என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த 2018-ல், திருச்செந்தூர் கோயில் கந்தசஷ்டி விழாவின்போது விரைவு தரிசனக் கட்டணமாக ரூ. 1000, விஸ்வரூப தரிசனக் கட்டணமாக ரூ. 2000 மற்றும் அபிஷேக தரிசனக் கட்டணமாக ரூ. 3000 நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்களின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்தக் கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது.

வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடப்பாண்டின் கந்தசஷ்டி விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நாட்களில் விரைவு சாமி தரிசனக் கட்டணமாக ரூ. 1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பை எதிர்த்து, பக்தர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்வதற்கு தடை கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று (அக்.24) விசாரித்தது. அப்போது, `சாமி தரிசனத்துக்கு ரூ. 1000, ரூ. 2000 என வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா’ என்றனர் நீதிபதிகள்.

இதைத் தொடர்ந்து, தமிழக இந்து சமய அறநிலைய ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in