ஜகபர் அலியின் உடலை தோண்டியெடுத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடற்கூராய்வு தொடர்பான காணொளியைக் கோரிய எங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஜகபர் அலியின் உடலை தோண்டியெடுத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
2 min read

லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடலைத் தோண்டியெடுத்து ஆய்வுசெய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம் பகுதியில் உள்ள வெங்களூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான ஜகபர் அலி, கடந்த ஜன.17-ல் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியில் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தனது கணவர் ஜகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது மனைவி மரியம், திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அப்பகுதியில் நடந்து வந்த சட்டவிரோத கனிமவளக் கொள்ளைக்கு இடையூறாக இருந்ததால், குவாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட சிலர் திட்டம் தீட்டி, ஜகபர் அலி மீது லாரி ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, கல்குவாரி உரிமையாளர்களான ராசு, ராமையா, ராசுவின் மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் ஓட்டுனர் காசிநாதன் ஆகியோர் மீது கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.

அதன்பிறகு ஜகபர் அலியின் மனைவி மரியம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில்,

`சுற்றுச்சூழல் ஆர்வலரான என் கணவர் ஜகபர் அலி, புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம் தாலுகாவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராகப் போராடி வந்தார். சட்டவிரோத குவாரிகளால் அரசுக்கு ரூ. 840 கோடி இழப்பு ஏற்பட்டதை வெளிக்கொண்டு வந்தார்.

கடந்த ஜன.17-ல் காட்டுபாபா மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிய என் கணவர் மீது லாரி ஏற்றி படுகொலை செய்துள்ளனர். என் கணவர் விபத்தில் இறந்ததுபோலக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக குவாரி நடத்தி வந்தவர்களிடம் இருந்து என் கணவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அது தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும்கூட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதைத் தொடர்ந்தே என் கணவர் கொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் ஜன.18-ல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆனால் தடய அறிவியல் விதிகளை பின்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்ளப்படவில்லை, எலும்பு முறிவுகள் தொடர்பாக எக்ஸ்ரே எடுக்கப்படவில்லை. உடற்கூராய்வு தொடர்பான காணொளியைக் கோரிய எங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

10 நாட்களுக்குப் பிறகே உடற்கூராய்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கு விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. விசாரணை சரியான பாதையில் செல்லுமா என்கிற சந்தேகம் உள்ளது. எனவே என் கணவர் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுத்து, மறு உடற்கூராய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே ஜகபர் அலியின் கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மரியத்தின் மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் இன்று (ஜன.30) நடைபெற்றது. அப்போது ஜகபர் அலியின் உடலை உடற்கூராய்வு செய்த புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர், `லாரி ஏறி இறங்கியதில் ஏற்பட்ட எலும்பு முறிவு மற்றும் காயங்களே ஜகபர் அலியின் இறப்புக்கு காரணம்’ என்று விளக்கம் அளித்தார்.

எக்ஸ்ரே எடுக்கக்கோரிய மனுதாரர் மரியத்தின் கோரிக்கையை அரசுத்தரப்பும் ஏற்றுக்கொண்டதால், புதைக்கப்பட்ட ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து, அதே இடத்தில் எக்ஸ்ரே எடுக்க நீதிபதி நிர்மல் குமார் உத்தரவிட்டார்.

மேலும், `திருமயம் வட்டாட்சியர் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் எக்ஸ்ரே எடுக்கப்பட வேண்டும். அப்போது வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது. நிகழ்வுகள் அனைத்தையும் காணொளி வாயிலாக பதிவு செய்யப்படவேண்டும், அந்தக் காணொளியை வேறு எங்கும் பகிரக்கூடாது’ என நீதிபதி நிர்மல் குமார் நிபந்தனை விதித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in