பெண்கள் குறித்து அவதூறுப் பேச்சு: பொன்முடி மீது வழக்குப்பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு!
ANI

பெண்கள் குறித்து அவதூறுப் பேச்சு: பொன்முடி மீது வழக்குப்பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு!

வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
Published on

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்.17) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 6 அன்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து அவதூறாகவும், சைவம், வைணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக 1996-2001 திமுக ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2002-ல் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அது தொடர்பான விசாரணை வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 2023-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி நீதிபதி வசந்த லீலா தீர்ப்பளித்தார்.

குற்ற விசாரணைச் சட்டம் 391-வது பிரிவின் கீழ், விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இந்நிலையில், அந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில், இன்று (ஏப்.17) நடைபெற்றது.

அப்போது, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் பொன்முடி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். பொன்முடி மீது 4, 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தெரிவித்துள்ளார்.

அதற்கு, `பொன்முடி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டும், அமைச்சரின் அவதூறுப் பேச்சுக்குக் காணொளி ஆதாரம் உள்ளது; எத்தனை புகார்கள் வந்தாலும் பொன்முடி மீது ஓரே வழக்கை மட்டுமே பதிவு செய்யவேண்டும், 4, 5 வழக்குகள் பதிவு செய்தால் அவை நீர்த்துப்போய்விடும். வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in