இனி உலக நாடுகளோடுதான் போட்டி: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்!

இனி உலக நாடுகளோடுதான் போட்டி: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்!

மத்திய அரசின் ஒட்டுமொத்த அரவணைப்பில் இருக்கும் மாநிலங்கள் கூட தமிழகத்தைவிட குறைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
Published on

தமிழ்நாடு இனி உலக நாடுகளுடன் போட்டியிடும், அந்த அளவுக்கு நாம் முன்னேறிய மாநிலமாக உள்ளோம் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியுள்ளார்.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்தில் வெளியாகியுள்ள தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 17.23 லட்சம் கோடியாக உயர்ந்து, 9.69 சதவீத வளர்ச்சியை தமிழகத்தின் எட்டியுள்ளது. இது இந்தியா மாநிலங்களிலேயே மிகவும் அதிகமாகும்.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் இன்று (ஏப்ரல் 5) செய்தியாளர்களை சந்தித்து, டி.ஆர்.பி. ராஜா பேசியதாவது, 

`ரூ. 15.71 லட்சம் கோடியாக 2023-24-ல் இருந்த தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, ரூ. 17.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களைப் பொறுத்தவரையில், அங்கெல்லாம் பெரும்பாலும் ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு அதிகம், சேவைத் துறையின் பங்களிப்பு அங்கே குறைவு.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே உற்பத்தி, சேவை என இரு துறைகளும் சமமான பங்களிப்பை வழங்குகின்றன. 9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு இரு துறைகளும் பங்களிப்பை வழங்கியுள்ளன. எனவே தனித்துவம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நம்மிடம் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உள்ளது. இது பிற மாநிலங்களில் இல்லை.

ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மகளிருக்கான உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் என ஒவ்வொரு திட்டமாகப் பார்த்துப் பார்த்து உருவாக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால்தான், கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளையும் தாண்டி இத்தகைய மகத்தான பரிசு கிடைத்திருக்கிறது.

மத்திய அரசின் ஒட்டுமொத்த அரவணைப்பில் இருக்கும் மாநிலங்கள் கூட தமிழகத்தைவிட குறைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. மத்திய அரசின் உதவி இல்லாமல் தமிழகம் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் போட்டி பிற நாடுகளுடன்தான். அந்த அளவுக்கு நாம் முன்னேறிய மாநிலமாக உள்ளோம்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in