
வேலூர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த கீழே தள்ளிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹேமராஜை, குற்றவாளி என்று திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் சித்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். சித்தூருக்குச் செல்வதற்காக கடந்த பிப்ரவரி 6 அன்று கோவை-திருப்பதி இண்டர்சிட்டி விரைவு ரயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் அவர் பயணித்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெட்டியின் கழிவறையை உபயோகிக்க அந்த கர்ப்பிணிப் பெண் முயன்றபோது, அங்கிருந்த ஒரு மர்ம நபர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். மர்ம நபரை எதிர்த்து கடுமையாகப் போராடியதில், அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கை முறிந்துள்ளது.
இதற்கிடையே கே.வி. குப்பம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, கூச்சலிட்டுப் பிறரை உதவிக்கு அழைக்க கர்ப்பிணிப் பெண் முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் அப்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். ரயிலில் இருந்து கீழே விழுந்ததும், அந்தப் பெண் மயக்கமடைந்துள்ளார்.
இந்த தகவல் கிடைத்ததும், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் அந்த பெண்ணுக்குக் காலில் முறிவும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சைக்குப் பிறகு அப்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியதும், ரயில்களில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பதிவேட்டில் உள்ள புகைப்படங்கள் அவரிடம் காட்டப்பட்டன. அப்போது, ஹேமராஜ் என்பவரை அவர் அடையாளம் காண்பித்துள்ளார்.
2022-ல் பெண் ஒருவரின் கைப்பேசியை பறித்து அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட வழக்கும், 2024-ல் குடியாத்தம் மலைப்பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கும் ஹேமராஜ் மீது நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹேமராஜை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் ஹேமராஜை குற்றவாளி என்று திருப்பத்தூர் நீதிமன்றம் இன்று (ஜூலை 11) அறிவித்துள்ளது.
ஹேமராஜுக்கான தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 14 அன்று வெளியிடப்படும் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.