
இன்று (அக்.6) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு முறையான திட்டமிடல் இல்லாததால் சென்னையில் உள்ள புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் கடுமையான மக்கள் நெரிசல் ஏற்பட்டது.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு தினத்தை ஒட்டி இன்று சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண மெரினா கடற்கரைப் பகுதியில் மட்டும் சுமார் 15 லட்ச மக்கள் கூடினர்.
சென்னை புறநகர் மற்றும் நகரத்தின் பிற பகுதிகளில் இருந்து பலரும் இந்த நிகழ்ச்சியைக் காண மெட்ரோ ரயிலில் பயணப்பட்டதால், இதுவரை இல்லாத அளவுக்கு மெட்ரோ ரயில்களில் கடுமையான மக்கள் நெருக்கடி ஏற்பட்டது.
அதிலும் சென்னை மெட்ரோ ரயிலின் இரு வழித்தங்களிலும் 7 முதல் 8 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே போதிய அளவில் புறநகர் ரயில்களை இயக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று வழக்கம்போல அரை மணிநேரத்திற்கு ஒரு புறநகர் ரயில் இயக்கப்பட்டது.
இதனால் வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ரயிலுக்காகக் காத்திருந்தனர். மேலும், புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் கடுமையாக இருந்ததால், பயணிகள் படிகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொண்டனர்.
அத்துடன் ரயில்கள் வரத் தாமதமானதால், சில புறநகர் ரயில் நிலையங்களில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர் தண்டவாளங்களில் நடந்து சென்றனர்.