
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 5 நபர்களின் உடல்கள் நேற்று (டிச.2) மீட்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 2 நபர்களின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டன.
கடந்த நவ.30-ல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல், டிச.1-ல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. முதலில் கடலூர் அருகே மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், வலுவிழந்த பிறகு மேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது.
இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்தத் தொடர் கனமழையால், திருவண்ணாமலை நகரில் உள்ள மகாதீப மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. நகர் குடியிருப்புப் பகுதியில் டிச.1 மாலை 4 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த நிலச்சரிவில் சிக்கி 7 நபர்கள் வரை புதையுண்டது தெரிய வந்தது. இதனை அடுத்து நிலச்சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் பணியினரும், காவல் துறையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
அதேபோல, வ.உ.சி. நகரில் நிலச்சரிவு நடந்த இடத்திற்கு அருகே அமைந்திருக்கும் மற்றொரு இடத்தில் நேற்று (டிச.2) காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பீதியடைந்து அங்கிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியின் விளைவாக நேற்று இரவு 8 மணி வரை, நிலச்சரிவில் சிக்கிய 7 நபர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதை அடுத்து இன்று (டிச.3) காலை மீதமிருக்கும் 2 நபர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.
இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.