வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (அக்.15) காலை வலுவடைந்துள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காலை முதல் வலுவடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் பயணித்து வட தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர், வெதர்மேன் பிரதீப் ஜான், புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டவை பின்வருமாறு:
`தற்போது வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி வருகிறது. இது மேலும் வலுவடைந்து புயலாக உருமாற 20 முதல் 25 சதவீதம் வரை வாய்ப்பு உள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (அக்.16) மாலை நேரத்துக்கு முன்பு வட தமிழகம் மற்றும் தென் ஆந்திர கரையோரத்தை நெருங்கும்.
அதேநேரம் தற்போது அரபிக் கடலிலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகரும்போதுதான், வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும். இதனால் 16, 17 தேதிகள் மட்டுமல்லாமல் 18-ம் தேதியில் கூட மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக ஆந்திராவின் நெல்லூரில் இருந்து தமிழகத்தின் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் அடுத்து 2 நாட்கள் கனமழை பொய்யும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையோரப் பகுதியை நெருங்கும் வேளையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர் போன்றவற்றிலும் மழை பெய்யும்.
அதிலும் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் என தமிழகத்தைச் சுற்றி இரு புறமும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் மையம் கொண்டிருப்பதால் நீலகிரி, கோவை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும்’ என்றார்.