
வங்கக் கடல் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (டிச.18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 24 மணிநேரத்தில், வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை இன்று பெய்யக்கூடும். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்க்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.