
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையானது இன்று முதல் படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. மேலும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 15, 16 தேதிகளில் புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திரக் கடற்கரை அருகே நிலைகொள்ளக் கூடும்.
இதன் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரக் கூடும். கனமழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று முதல் விட்டுவிட்டு மழை தொடங்கி நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் தொடங்குவதற்கான சூழல் உள்ளது" என்றார் பாலச்சந்திரன்.