கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக புதுச்சேரி, வடதமிழகம், தெற்கு ஆந்திரப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
எனவே, கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது
மேலும், அக்டோபர் 15 முதல் அக்டோபர் 18 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் மழையின் அபாயத்தால் வேளச்சேரி பாலத்தில் இப்போது இருந்தே மக்கள் தங்களின் கார்களை நிறுத்தி வருகின்றனர்.
சென்னையில் வேளச்சேரி, மடிபாக்கம், துரைப்பாக்கம் உள்பட பல இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் கனமழையால் கார்கள் அடிக்கப்பட்டு செல்லும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். எனவே, இந்தாண்டு முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் இப்போது இருந்தே மக்கள் தங்களின் கார்களை நிறுத்தி வருகின்றனர்.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.