
சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் இரு நாட்களுக்கான கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (மே 19) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா கூறியதாவது,
`கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21-ம் தேதி வாக்கில், ஒரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக 22-ம் தேதி வாக்கில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.
தென்மேற்குப் பருவமழை இன்று தெற்கு அரபிக்கடல், மாலத்தீவு, குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மீதும் பரவியுள்ளது. இன்று காலை, வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்துள்ளது.
19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இன்று தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
(நாளை) 20-ம் தேதியைப் பொறுத்தவரையில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றும், நாளையும் சென்னையில் வெப்பம் குறைவாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்’ என்றார்.