
சென்னை மேடவாக்கத்தில் 16 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை திடீரென கனமழை பெய்தது. சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டார்கள். அலுவலகம் செல்வோர் மழையால் இரு சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி மழை நிற்கும் வரை சாலையிலேயே காத்திருந்தார்கள்.
திடீரென ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் சில இடங்களில் 10 செ.மீ. வரை மழை பதிவானதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
"10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரலில் பெய்யும் அரிய மழை. சென்னையில் சில இடங்களில் 10 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டார்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நீர் தேங்கிய இடங்களில் மோட்டார் மூலம் அகற்றப்பட்டன. குறிப்பாக, மேடவாக்கம் - வேளச்சேரி பிரதான சாலையில் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மேடவாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.