சேகர்பாபு vs ஜெயக்குமார்: முதலில் வந்தவர் யார்?

அதிமுக வேட்பாளர் முதலில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
சேகர்பாபு vs ஜெயக்குமார்: முதலில் வந்தவர் யார்?
படம்: https://twitter.com/PKSekarbabu

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின்போது திமுக மற்றும் அதிமுக இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் ராயபுரம் மனோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். பாஜக சார்பில் பால் கனகராஜ் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் மூவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்கள். திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் வந்தார்கள். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வந்தார்கள்.

இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்ததால், முதலில் யார் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற பிரச்னை எழுந்தது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு சேகர் பாபு மற்றும் ஜெயக்குமார் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால், இரு கட்சிகளினுடைய வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

திமுகவினரும், அதிமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால், அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

"வேட்புமனு தாக்கல் செய்ய எங்களுடைய வரிசை எண்.2, அவர்களுடைய வரிசை எண்.7. ஆனால், வேட்புமனு தாக்கல் செய்ய சென்றவுடன், அவர்களும் (அதிமுக) கும்பலாக வந்து முதலில் எங்களுடைய வேட்புமனுவை தான் முதலில் ஏற்க வேண்டும் என்றார். எங்களுடைய வேட்பாளர்தான் முதலில் வந்தார் எனப் பிரச்னை செய்துவிட்டார்கள்" என்றார் சேகர் பாபு.

இந்தப் பிரச்னை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

"எங்களுடைய வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் வேட்புமனுக்கள் பெறப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனடிப்படையில் நாங்கள் முதலில் வந்துள்ளோம். 11.59-க்கு முதலில் வந்தோம். வரிசை எண். 7-ஐ எங்களுக்குக் கொடுத்தார்கள். இதைக் கொண்டு மேலே சென்றபோது சுயேச்சைகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துகொண்டிருந்தார்கள். இதனால், காத்திருந்தோம். இதைத் தொடர்ந்து, நாங்கள் உள்ளே செல்லும் நேரத்தில் திமுக வேட்பாளர் உள்பட 8, 9 பேர் உள்ளே இருந்தார்கள். மரபைப் பின்பற்றாமல் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் முன்னே சென்று இருக்கையை ஆக்கிரமித்தார்கள்" என்றார் ஜெயக்குமார்.

இந்த வாக்குவாதம் நீண்ட நேரம் நீடிக்க, இறுதியில் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை முதலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் அதிமுக வேட்பாளர் முதலில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர், தலைமைத் தேர்தல் அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசிய பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in