
இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி எவ்வளவு வருவாய் ஈட்டப்பட்டது என்ற விவரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சோனி நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், காப்புரிமைச் சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் தனது பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
குறிப்பாக, சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் நிறுவனம், தன் அனுமதியின்றி பாடல்களை மாற்றியும், சிதைத்தும் பயன்படுத்துவதாகப் புகார் கூறிய இளையராஜா, சோனி அந்தப் பாடல்களை எக்கோ ரெகார்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகக் கூறுவதாகவும், ஏற்கெனவே தன் பாடல்களைப் பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தபோதும் அதை மதிக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார்.
காப்புரிமைச் சட்டத்தின் படி தனது இசைக்கு உரிமை தன்னிடமே உள்ளது என்றும் அதனால், சோனியோ அதைச் சார்ந்த பிற நிறுவனங்களோ தனது பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் மற்றும் வரசு செலவு குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 22-க்கு தள்ளி வைத்தார்.