கீழடி தொல்லியல் பொருள்களை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

"அடுத்த 9 மாதங்களில் 5,765 தொல்லியல் பொருள்களை ஒப்படைக்க வேண்டும்."
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைANI
1 min read

கீழடி அகழாய்வில் எடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்களை மாநில அரசிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, இவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, முதலிரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளின்போது எடுக்கப்பட்ட 5,765 தொல்லியப் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் அகழாய்வுப் பணிகளுக்கான அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்றும் வழக்கிறஞர் கனிமொழி மதி என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அடுத்த 9 மாதங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக தொல்லியல் அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்த 9 மாதங்களில் சென்னையிலுள்ள இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 5,765 தொல்லியல் பொருள்களை மாநில அரசிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணனின் பணிமாற்றப்பட்டதால், இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in