விஜயின் வாக்காளர்கள் என்னுடைய வாக்காளர்கள் இல்லை, ஆனால் தம்பி விஜயின் ரசிகர்கள் பாதி பேருக்கு மேல் எனக்குத்தான் வாக்களிப்பார்கள் என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று சீமான் பேசியவை பின்வருமாறு,
`விஜய், எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கட்சி ஆரம்பிக்கும்போது இருந்த சூழலில் தங்களது ரசிகர்களை சந்தித்தனர். சீமானும் திரை உலகில் இருந்து வந்தார் என கூறுகின்றனர். ஆனால் நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. ரசிகர் மன்றத்தினரை கிளை மன்றமாகவோ, ரசிகர்களை தொண்டர்களாகவோ நான் மாற்றவில்லை.
இந்த மண்ணில் சாதி, மத உணர்ச்சி புரையோடிப்போய் உள்ளது, மொழி, இன உணர்ச்சி சுத்தமாக செத்துப்போயுள்ளது. செத்துப்போன உணர்ச்சியை ஊட்டி இத்தனை லட்சம் இளைஞர்களை திரட்டி, தனித்து நின்று, ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி என்னுடையதுதான். கமல்ஹாசன் அரசியலுக்கு வரும்போதும் இதே நெருக்கடி எனக்கு இருந்தது.
திரைப்புகழ் பெற்ற நடிகர் பொது இடத்தில் வரும்போது அதை பார்க்கவேண்டிய நோக்கில் மக்கள் கூடுவார்கள். அது இயல்பு. அதனால் எங்கள் கொள்கையில் பின்னடைவு வந்துவிடும் என்று கருதக்கூடாது. தம்பி விஜயின் வாக்காளர்கள் என்னுடைய வாக்காளர்கள் இல்லை. தம்பி விஜயின் ரசிகர்கள் பாதி பேருக்கு மேல் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்.
அண்ணனாக நான் கூறவேண்டிய அறிவுரையை என் தம்பிக்கு நான் கூறிவிட்டேன். அதே போல அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்த் அய்யாவுக்கும் நான் கூறினேன். ஆனால் எனக்கு வழி கிடையாது. நான் விரும்பி கட்சி ஆரம்பித்து, முதல்வராகி ஆளவேண்டும் என்பது கிடையாது’ என்றார்.