செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்து பிஎன்ஒய் மெலன் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். இவரது முன்னிலையில் ரூ. 900 கோடி முதலீட்டில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து சிகாகோ சென்றார் முதல்வர் ஸ்டாலின். இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ. 850 கோடி அளவுக்கு முதலீடுகள் வரவிருப்பதாகக் கூறினார்.
இந்த வரிசையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்து பிஎன்ஒய் மெலன் நிறுவனத்துடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். பிஎன்ஒய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை சிகாகோவில் சந்தித்த அவர், புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த வங்கி தனது ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளது. சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைக்கவும், தரவுகளைப் பகுப்பாய்வு செய்யவும், மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.