ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவது குறித்து அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தற்போது சிகாகோவில் உள்ள முதல்வர் ஸ்டாலின், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"ஃபோர்டு மோட்டார்ஸ் குழுவினருடன் மிகவும் ஆழமான விவாதம் நடைபெற்றது. ஃபோர்டு - தமிழ்நாடு இடையிலான 30 ஆண்டுகால கூட்டுறவை மீண்டும் புதுப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது" என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபோர்டு மோட்டார் நிறுவனம் 2021-ல் இந்தியாவை விட்டு வெளியேறியது. 20 ஆண்டுகளுக்கும் மேல் பெரிதளவில் லாபம் ஈட்ட முடியாததால், இந்த முடிவை எடுத்தது. 2022-ல் இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை மின்சார வாகனங்கள் ஏற்றுமதிக்குப் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வந்தது. எனினும், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடன் இந்தத் திட்டம் இறுதியாகவில்லை.
சென்னையை அடுத்த மறைமலை நகரில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துக்கு 350 ஏக்கரில் பெரிய உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. சுமார் 2 லட்சம் வாகனங்கள் மற்றும் 3.40 லட்சம் என்ஜின்களை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்குத் திறன் கொண்டது. எண்ணூர் துறைமுகத்திலிருந்து சுமார் 74 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் ஏற்றுமதிக்கு ஏதுவாக இருக்கும். இதன் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஃபோர்டு மோட்டார் நிறுவனம் மீண்டும் சென்னை திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.