குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: டிஎன்பிஎஸ்சி | TNPSC | Group 4

டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய பலரைக் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

கடந்த 2019-ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சி கடந்த 2019-ல் நடத்திய குரூப்-4 தேர்வை மாநிலம் முழுவதும் 5,574 மையங்களில் சுமார் 16 லட்சம் தேர்வர்கள் எழுதினார்கள். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை இருந்த தேர்வு மையங்களில் இந்த தேர்வை எழுதியவர்கள், முதல் நூறு இடங்களுக்குள் இடம்பெற்று தேர்வில் வெற்றி பெற்றனர்.

இந்த விவகாரம் குறித்துப் புகார் எழுப்பப்பட்டதும் விசாரணை மேற்கொண்டபோது, தேர்வில் முறைகேடு நடைபெற்றது தெரிய வந்தது. அதன்பிறகு டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய பலரை கைது செய்தனர்.

இதற்கிடையே மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ஸ்டாலின், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2020-ல் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், உயரதிகாரிகள் யாரும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றும், அவர்களின் ஆதரவு இல்லாமல் மோசடி நடைபெற்றிருக்காது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடும்படியும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த பொதுநல வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்த 2021 டிசம்பர் 14-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தரப்பு வழக்கறிஞர் வாதங்களை சமர்ப்பித்தார்.

வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பொது நல வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in