குரூப்-4 தேர்வில் எந்தக் குளறுபடிகளும் நிகழவில்லை: டிஎன்பிஎஸ்சி | TNPSC

சேலம் விடைத்தாள்களும் சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளிலேயே டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன - டிஎன்பிஎஸ்சி
குரூப்-4 தேர்வில் எந்தக் குளறுபடிகளும் நிகழவில்லை: டிஎன்பிஎஸ்சி | TNPSC
2 min read

குரூப்-4 தேர்வு விடைத்தாள்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் எவ்வித குளறுபடிகளும் நிகழவில்லை என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுக்க கடந்த ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு விடைத்தாள்கள் சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதில் சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்ட விடைத்தாள்கள் இருந்த பெட்டிகள் சீலிடப்படவில்லை என்றும் சென்னை வரும்முன் வழியிலேயே அவை பிரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு டிஎன்பிஎஸ்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குரூப்-4 தேர்வுகள் தமிழ்நாடு முழுக்க கடந்த ஜூலை 12 அன்று 4,922 தேர்வு மையங்களில் நடைபெற்றது.இதில் 13,89,238 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்ததில் 11,48,019 விண்ணப்பதாரர்கள் தேர்வினை எழுதினார்கள்.

தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளில் (Stainless Steel Boxes) டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு ஜூலை 13 அன்று காலை வரை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. இதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை.

சேலத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வு தொடர்புடைய விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் இருந்தது என பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

சேலம் மாவட்ட விடைத்தாள்களும் சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு ஜூலை 13 அன்று அதிகாலை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன என்ற செய்திகளில் உண்மை இல்லை.

ஓஎம்ஆர் விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப் பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு அவை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு வந்து சேரும் வரை 24*7 முறையில் நேரலையாகக் கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு சிசிடிவி கேமிரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. எந்த ஒரு விடைத்தாளும் செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவாறு அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படுவது இல்லை.

பத்திரிகைச் செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், பயன்படுத்தப்பட்ட காலி அட்டைப் பெட்டிகள் மற்றும் தேர்வுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் உபரியாக இருந்த வினாத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் போன்றவையாகும். இவை தேர்வில் பயன்பட்டதுபோக மீதமிருந்த வினாத் தாள்கள் என்பதால், வழக்கான நடைமுறையின்படி, அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும்.

எனவே, ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் பத்திரிகை மற்றும் இதர ஊடக செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும்" என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

TNPSC | Group 4 | Group 4 Exam | Edappadi Palaniswami | Group 4 Answer Sheets | Stainless Steel Boxes

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in