
வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு ஓ.எம்.ஆர். ஷீட் முறையில் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்.14-ல் 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த டிச.12-ல் வெளியானது. இதன்படி, 534 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 முதன்மை தேர்வுக்காக 7,987 தேர்வர்களும், 2,006 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்காக 21,822 தேர்வர்களும் தேர்வாகினர்.
இதைத் தொடர்ந்து, குரூப் 2 முதன்மைத் தேர்வு வரும் பிப். 2 மற்றும் 23 தேதிகளிலும், குரூப் 2ஏ முதன்மை தேர்வு வரும் பிப். 2 மற்றும் 8 தேதிகளிலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் எஸ். கோபால சுந்தர ராஜ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி பிப்.8 அன்று நடைபெறவுள்ள குரூப் 2ஏ முதன்மை தேர்வின் 2-ம் தாளுக்கான (பொது அறிவு) தேர்வு ஓ.எம்.ஆர். ஷீட் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு கணினி முறையில் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் பிப்.2 அன்று நடைபெறவுள்ள குரூப் 2ஏ தேர்வின் 1-ம் தாளான பொதுத் தமிழ் (தகுதி) தேர்வு எழுத்துப்பூர்வமாகவே நடைபெறும்.