உயர்கல்வித் துறை பொறுப்பை வகிக்கும் முதல் தலித் அமைச்சர்: யார் இந்த கோவி. செழியன்?

உயர்கல்வித் துறை பொறுப்பை வகிக்கும் முதல் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அமைச்சர் என்ற பெருமையை கோவி. செழியன் பெற்றுள்ளார்.
உயர்கல்வித் துறை பொறுப்பை வகிக்கும் முதல் தலித் அமைச்சர்: யார் இந்த கோவி. செழியன்?
படம்: https://x.com/GChezhiaan
1 min read

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 5-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, கோவி. செழியன் (புதுமுகம்), ஆர். ராஜேந்திரன் (புதுமுகம்), ஆவடி நாசர் ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்கள். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.

கோவி. செழியன் தமிழக அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், அமைச்சரவையில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சி.வி. கணேசன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஏற்கெனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்கள்.

கோவி. செழியனுக்கு உயர்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உயர்கல்வித் துறை பொறுப்பை வகிக்கும் முதல் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அமைச்சர் என்ற பெருமையை கோவி. செழியன் பெற்றுள்ளார்.

யார் இந்த கோவி. செழியன்

கோவி. செழியன் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை திமுகவைச் சேர்ந்த கோவிந்தன். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலை படிப்பை மேற்கொண்டார். அதேவேளையில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப்படிப்பையும் படித்தார்.

இதைத் தொடர்ந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், முதுகலை சமூகவியல் படிப்புகளை முடித்தார். படிப்பின் மீது இருந்த ஆர்வம் கோவி. செழியனை மேலும் தூண்டியது. சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

படிப்புக்கு மத்தியில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார் கோவி. செழியன். கட்சிக்குள் படிப்படியாக முன்னேற்றம் கண்ட இவர், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி கண்ட 31 தொகுதிகளில் திருவிடைமருதூரும் ஒன்று. அதிமுக சார்பில் போட்டியிட்ட பாண்டியராஜனைவிட வெறும் 394 வாக்குகள் கூடுதலாகப் பெற்று கோவி. செழியன் வெற்றி கண்டார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திருவிடைமருதூரில் மீண்டும் போட்டியிட்டார் கோவி. செழியன். இந்த முறை 532 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

திருவிடைமருதூரில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கோவி. செழியனுக்கு 2021-ல் வழங்கப்பட்டது. இதிலும் வெற்றி கண்ட செழியன், அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in