
திமுக அரசின் சாதனைகளை விவரிக்கின்ற வகையில் இருக்கும் உரையைப் படிப்பதற்குத் தயங்கித்தான் அவையில் இருந்து வெளியேறி ஆளுநர் ஆர்.என். ரவி நாடகம் நடத்தியுள்ளதாக விமர்சித்துள்ளார் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.
நடப்பாண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் இன்று (ஜன.6) தொடங்கியது. ஆனால் சட்டப்பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவையை விட்டு ஆளுநர் வெளியேறினார்.
தேசிய கீதம் இசைக்கப்படாததால், உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதாக, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளது ஆளுநர் மாளிகை. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சிவசங்கர் வழங்கிய பேட்டி பின்வருமாறு,
`தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாட்டு சட்டமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஆளுநர் நடந்துகொண்டார். மரபின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்ன நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்ததோ, அதுதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஆளுநர் நினைக்கிறார்.
ஆளுநர் உரையை வாசித்தால் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை வரிசையாக அடுக்க வேண்டிய சூழல் வரும் என்ற காரணத்தால், இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடாது என்கிற எண்ணத்தினாலும்தான் அவர் இன்றைக்கு அப்படி நடந்துகொண்டார்.
59 பக்க ஆளுநர் உரை, முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசின் சாதனைகளை முழுவதுமாக விவரிக்கின்ற வகையில் இருக்கிறது. அதைப் படிப்பதற்குத் தயங்கித்தான் இந்த நாடகத்தை நடத்தியுள்ளார். கடந்த முறை தமிழ்நாட்டின் தலைவர்களுடைய பெயர்களைச் சொல்லாமல் மறைத்தவர், இன்றைக்கு ஒட்டுமொத்தமாக ஆளுநர் உரையை புறக்கணித்துச் சென்றுள்ளார்.
அதற்கு, தேசிய கீதம் பாடப்படவில்லை என காரணம் கூறியிருக்கிறார். ஏதோ தேச பக்தியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தது அவர்தான் என்பதுபோலப் பேசுகிறார். தேச பக்தியில் தமிழ்நாட்டு மக்களவைவிட, ஆளுநர் பெரிய ஆள் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பலரும் தங்களது உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்துவிட்டு, அவை முடிகின்றபோது தேசிய கீதத்தைப் பாடுவது மரபாக இருந்தது. தேசிய கீதத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை அவமரியாதை செய்தது கிடையாது. இந்தத் தவறான வாதத்தை முன்வைத்து ஒரு நாடகத்தை நடத்திய ஆளுநர் இதற்காக வருத்தம் தெரிவிக்கவேண்டும்.
சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர், மன்னிப்பு கேட்க வேண்டும். தேசப்பற்று குறித்து எங்கள் தலைவர்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி ஆளுநருக்கு இல்லை. கடந்த ஆண்டு, தேசிய கீதம் பாடும் வரை காத்திருக்காமல் அவையில் இருந்து வெளியேறி, தேசிய கீதத்தை அவமதித்தார். எனவே அதற்காக அவர்தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. பதவிக்காலம் முடிந்தும் அதில் அவர் ஒட்டிக்கொண்டிருக்கின்றார். உடனடியாக பதவியைவிட்டு வெளியேறுவதுதான் படித்த ஐபிஎஸுக்கு அழகு’ என்றார்.