
தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி அழகாகப் பாதுகாப்பதற்காகப் பாராட்டிப் பேசியுள்ளார் நடிகர் பார்த்திபன்.
நேற்று (மார்ச் 25) உலக காசநோய் தினமாகும். இதை ஒட்டி, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, அர்ப்பணிப்புடன் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை கௌரவிக்கும் வகையில் சென்னை ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பேசியதாவது,
`இந்த நிகழ்ச்சி எவ்வளவு மேன்மையானது என்பதும், அது யாரால் நடத்தப்படுகிறது என்பதும் மிகவும் அவசியமான விஷயங்கள். இந்த விழா அரங்கில் நுழைந்தது முதல், தமிழ் மணக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை இவ்வளவு அழகாகப் பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு எனது மரியாதையை தெரிவிக்க விரும்புகிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்குப் புரியுமா என்று விசாரித்தேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகவும், அவருக்கு தமிழ் புரியும் என்றும் திருஞானசம்பந்தம் கூறினார். அதனால்தான் தமிழ் புத்தகங்களை அவருக்குப் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதனின் ஐந்து நிமிடப் பேச்சை வைத்து அவனை எடைபோடும் அளவுக்கு அவருக்குத் தமிழ் புரிகிறது.
எனது தந்தை நிறைய புகைபிடித்துள்ளார். அது எனக்குள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கவர்னர் பீடி குடிப்பார். இவ்வாறு கூறுவதால் ஆளுநர் என்னை தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாது. இதை நான் எதனால் கூறுகிறேன் என்றால், ஒரு பொருளுக்கு நாம் பெயரிடும்போது அதற்குப் போதிய அளவில் தணிக்கை இருக்கவேண்டும்.
ஒரு பீடிக்கு எவ்வாறு கவர்னர் பீடி என்று பெயர் வைக்கலாம்? இவ்வளவு உயர்ந்த பதவியின் பெயரை ஒரு பீடிக்கு வைப்பது வன்முறையான விஷயம்’ என்றார்.