உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்?: ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆளுநர் வெளியேறிய பிறகு, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.
உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்?: ஆளுநர் மாளிகை விளக்கம்
ANI
1 min read

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், உரை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என். ரவி. தேசிய கீதம் இசைக்கப்படாததால் வெளியேறியதாக, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளது ஆளுநர் மாளிகை.

நடப்பாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில், சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஆளுநர் தலைமையில் காலை 9.30 மணிக்குச் சட்டப்பேரவை அலுவல் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஓரிரு நிமிடங்களிலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என். ரவி. அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக தமிழில் வாசித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கிண்டி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு, `தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் இந்திய அரசியலமைப்பும், தேசிய கீதமும் அவமதிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின்படி தேசிய கீதத்தை மதிப்பது முதன்மையான அடிப்படைக் கடமையாகும். அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது.

இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் இசைக்கப்பட்டது. இதனை ஆளுநர் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை இசைக்கும்படி முதல்வருக்கும், சபாநாயகருக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியலமைப்பையும், தேசிய கீதத்தையும் அப்பட்டமாக அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் வேதனையுடன் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்’.

மேலும், அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தை முன்வைத்து, `யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் அணிந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in