மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

கள்ளச்சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டால் கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்
மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
1 min read

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய புழக்கத்தை ஒழிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஜூன் 18-ல் கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவ சேரி, சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 229 பேர் மெத்தனால் கலந்த விஷசாராயத்தை அருந்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 66 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதை அடுத்து கடந்த ஜூன் 29-ல் கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்கவும், கள்ளச் சாராயத்தை தயாரித்து விற்பவருக்கு கடுமையான தண்டனை அளிக்கவும், மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு இன்று (ஜூலை 12) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

1937-ல் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு சட்டம் தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தில் கள்ளச்சாராயத்தை தயாரித்தல், கையிருப்பு வைத்திருத்தல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் போதுமானதாக இல்லை என்பதால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதிய மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின்படி கள்ளச்சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அது போக குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்வதோடு, மது அருந்த பயன்படுத்தப்படும் உரிமம் இல்லாத இடங்களை மூடி சீல் வைக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற ஒருவரை சம்மந்தப்பட்ட பகுதியில் இருந்து அகற்றுவதற்கு, மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் இந்த திருத்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in