துணைவேந்தர்களுக்கு காவல்துறை மிரட்டல்: ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு

துணைவேந்தர்களுக்கு காவல்துறை மிரட்டல்: ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு

பல்கலைக்கழகங்களின் தரத்தை அதிகரிக்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது, இதில் அரசியல் இல்லை.
Published on

உதகை மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில காவல்துறை மிரட்டியுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில், தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் இன்றும் (ஏப்.25), நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துணைவேந்தர்கள் மாநாட்டை, தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.

இந்நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆளுநர் ரவி பேசியதாவது, 

`பல்கலைக்கழகங்களில் நிதி மேலாண்மையை எவ்வாறு கடைபிடிக்கவேண்டும் என்ற அமர்வு இந்த மாநாட்டில் உள்ளது. ஏனென்றால் நமது பல்கலைக்கழகங்களில் மிகவும் மோசமான சூழல் உள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் கடந்த பல மாதங்களாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

ஊதியம் தரவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இதுதான் கள நிலவரம். துரதிஷ்டவசமாக இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவில்லை. இதில் கலந்துகொள்ளக்கூடாது என்று மாநில அரசு துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர்கள் என்னிடம் எழுத்துப்பூர்வமாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஒரு துணைவேந்தர் காவல்நிலையத்தில் உள்ளார். சில துணைவேந்தர்கள் ஊட்டியை வந்தடைந்துள்ளனர், ஆனால் இதற்கு முன்பு எப்போதும் ஏற்படாத சம்பவம் தற்போது நடந்தேறியுள்ளது. அவர்களின் வசிப்பிடங்களுக்கு நள்ளிரவில் சென்று கதவைத் தட்டிய காவல்துறையினர், மாநாட்டில் கலந்துகொண்டால் நீங்கள் வீடு திரும்பி உங்கள் குடும்பத்தினரை சந்திக்கமுடியாது என்று மிரட்டியுள்ளனர்.

குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுமாறும், அவர்களின் நலன்களின் கவனம் செலுத்துமாறும் அவர்களுக்கு நான் ஆலோசனை கூறுகிறேன். பல்கலைக்கழகங்களின் தரத்தை அதிகரிக்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது, இதில் அரசியல் இல்லை’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in