சென்னை கிண்டியிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் மீது நோயாளியின் மகன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால் குத்தப்பட்டதில் நிலைகுலைந்த அரசு மருத்துவர் பாலாஜிக்கு, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவருக்குச் சிகிச்சையளித்த அரசு மருத்துவர் செய்தியாளர்களைச் சந்தித்து, சம்பவம் குறித்தும் மருத்துவரின் உடல்நிலை குறித்து விளக்கினார்.
"இந்தச் சம்பவம் குறித்து மருத்துவர் வெளியில் வந்து சொன்னால் தான் தெரியும். எங்களைப் பொறுத்தவரை அந்தப் பையனை அழைத்து நாங்கள் விசாரித்ததில், அவருடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. 6 முறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, நுரையீரல் பாதிப்பு காரணமாக அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
இரு நாள்களுக்கு முன்பு மீண்டும் தாயாருக்கு உடல்நலம் குன்றியதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு, தாயாருக்கு சிகிச்சைக் கொடுத்திருக்கிறார்கள், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பு ஏன் ஏற்பட்டது எனத் தெரியவில்லை எனச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாகக் கேட்க வந்துள்ளார். அப்போது மருத்துவருடன் தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதுவும் தர்க்கம் ஏற்பட்டதா இல்லையா என்பது அரசு மருத்துவர் வந்து கூறினால்தான் தெரியும். நாங்கள் அந்தப் பையன் மூலம் கேட்டது இதுதான்.
ஒரேயொரு பையன். அவரைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். காவல் துறையினர் தான் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
வெளிநோயாளி சிகிச்சை அறையில் கதவை அடைத்துவிட்டு, மருத்துவரைக் கத்தியால் குத்தியிருக்கிறார். கழுத்து, நெற்றி, முதுகு, தலை என மருத்துவரின் உடலில் 7 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறார்.
வயிற்றில் ரத்தப் போக்கு எதுவும் இல்லை. மற்ற இடங்களில் ரத்தம் நிறைய கசிந்திருந்தது. அவர் ஏற்கெனவே இதய நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்காக அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். இதற்காக குறிப்பிட்ட ஒரு மருந்தை எடுப்பதால், இயல்பாகவே ரத்தக் கசிவு அதிகமாக இருக்கும். ரத்தக் கசிவு அதிகமாக இருந்ததால், உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து முடித்துள்ளோம்.
நோயாளியின் மகன் பெயர் விக்னேஷ். பெருங்களத்தூரைச் சேர்ந்தவர். மருத்துவரின் பெயர் பாலாஜி. தற்போதைய நிலையில் மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது" என்றார் அரசு மருத்துவர்.