50 லட்சம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட இலக்கு நிர்ணயித்துள்ளதாக தன் எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
2021-ல் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகான 3 ஆண்டுகளில், ரூ. 10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதை ஒட்டி, இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance Tamil Nadu) அலுவலகத்துக்குச் சென்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதள கணக்கில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவனத்தின் பணியாளர்களைச் சந்தித்தேன். இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 சதவீத பணிகள் நிறைவேறியிருக்கின்றன;
மீதமுள்ள 40 சதவீத பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்’ என்றார்.
தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu). 1992-ல் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், தமிழ்நாடு தொழில் வசதி விதிகளின் கீழ் ஒற்றை சாளர முறையில் தொழில் முதலீட்டுக்கான ஊக்குவிப்பை செய்து வருகிறது.