வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணிக்கு இயக்குநர் த.செ. ஞானவேல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஜெய்பீம், வேட்டையன் படங்களின் இயக்குநர் த.செ. ஞானவேல் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது:
“வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.
இண்டியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையை அளிக்கின்றன. மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம்.
அதன் அடிப்படையில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.