அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்!

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்!

ஞானசேகரனுக்கு சிறையில் எந்தவொரு சலுகையும் வழங்கக்கூடாது.
Published on

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பின்றி ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை படித்துவந்த மாணவி ஒருவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஞானசேகரன் திமுகவினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளவர் என்பதால் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுமாறு அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உயர் நீதிமன்ற அமர்வின் வழிகாட்டுதலின்படி, வழக்கை விசாரிக்க சினேகா பிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகிய 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்த அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு ஞானசேகரன் மீதான முதல்கட்ட குற்றப்பத்திரிகை சென்னை சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த பிப் 24-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

அதன்பிறகு, இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி எம். ராஜலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.பி. மேரி ஜெயந்தியும், ஞானசேகரன் தரப்பில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழக்கறிஞர்கள் கோதண்டம், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கு விசாரணை கடந்த மே 20-ல் நிறைவுபெற்ற நிலையில், கடந்த மே 28-ல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அரசுத் தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததால், குற்றம்சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

இதை அடுத்து ஞானசேகனுக்கான தண்டனை விவரங்கள் இன்று (ஜூன் 2) வெளியாகின. இதன்படி, குற்றவாளிக்கு ரூ. 90 ஆயிரம் அபராதமும், 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

மேலும், இந்த சிறை தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும், சிறையில் அவருக்கு அந்த சலுகைகளும் வழங்கக்கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in