

தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக உட்கட்சிப் பிரச்னை நிலவுகிறது. குறிப்பாக கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நேற்று (ஜன 2) வெளியிட்டிருந்த அறிக்கை சர்ச்சையைக் கிளப்பியது. அதில், “சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலைத் தர விடாமல் சொந்தக் கட்சியே முடக்குகிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார். மறுபுறம் காங்கிரஸில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயைச் சந்தித்த சம்பவமும் கட்சிக்குள் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
கிரிஷ் சோடங்கருடன் ஆலோசனை
இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது ஜோதிமணி வைத்த குற்றச்சாட்டு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்பின்னர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது:-
“தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைமையுடன் காங்கிரஸ் தேலைமை பேச்சு நடத்தி வருகிறது. திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளது.
தவெகவுடன் கூட்டணிப் பேச்சு இல்லை
திமுகவுடனான கூட்டணியில் பிரச்னை என்று யாராவது சொன்னார்களா? திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸில் இருந்து யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. யாரோ பேசுவதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது.
ஜோதிமணி குற்றச்சாட்டை விசாரிக்கக் குழு
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அளித்த புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும். முதலில் உரிய விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்னர் ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம். இது குறித்த உடனடி நடவடிக்கை தேவை என்றபோதிலும் கட்சியின் சட்டதிட்டங்களின் படியே நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், அவர் எழுப்பியுள்ள பிரச்னையைப் புரிந்துகொண்ட பிறகே உரிய தீர்வு காணமுடியும். இது தொடர்பாக நிர்வாகிகள் பொது தளத்தில் கருத்துகளைப் பகிர வேண்டாம். அது தேர்தல் நேரத்தில் கட்சியின்மீது தேவையில்லாத களங்கத்தை ஏற்படுத்தும்.” என்றார்.
Congress leader Girish Chodankar has said that the Congress party has not held alliance talks with TVK