

சென்னையில் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களைப் புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கடி சம்பவங்களையும் ரேபிஸ் நோய் பாதிப்பையும் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வீட்டிற்கு வெளியில் அழைத்துச் செல்லும்போது கழுத்துப்பட்டை, முகக்கவசம் ஆகியவற்றை அணிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சமீப காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்குவது குறித்த புகார்கள் முன்வைக்கப்பட்டன. அதில் பெரும்பாலானவை ஆக்ரோஷமான குணநலன்கள் கொண்ட பிட்புல், ராட்வீலர் வகை நாய்களால் நடப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து இவ்விரு வகை நாய்களின் உரிமையாளர்கள், தங்கள் செல்லப் பிராணிகளை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வளர்க்க வேண்டும் என்று மாமன்றக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட வளர்ப்பு நாய் இனங்களான பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய் வகைகளை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக வாங்கி வளர்ப்பதற்கு தடை விதிக்க மன்ற கூடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி டிசம்பர் 20 (நாளை) முதல் பிட்புல் மற்றும் ராட்வீலர் வகை நாய்களைச் செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், ஏற்கனவே உரிமம் பெற்ற இவ்வகை நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது கழுத்துப்பட்டை மற்றும் வாய்க்கவசம் அணிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுவதாகவும், இதனைப் பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ. 5,000 அபராதம் மற்றும், உரிமமின்றி சட்ட விரோதமாக பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய் வகைகளைப் புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
A resolution was passed at the Greater Chennai Corporation meeting banning the purchase and breeding of new Pitbull and Rottweiler dogs.