
காசாவில் நடக்கும் போர்க் காட்சிகள் ஒவ்வொன்றும் என் மனதை உலுக்குகிறது. உலகம் இதைப் பாராமல் இருக்கக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தின் கடும் அழுத்தத்தால் காசாவின் உயிரிழப்பு எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்திருப்பதாக வெளியான செய்தியைப் பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில்,
“காசா மூச்சுத் திணறுகிறது. உலகம் பாராமல் இருக்கக் கூடாது. காசாவில் நடக்கும் நிகழ்வுகள் என்னை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உலுக்கியுள்ளன. ஒவ்வொரு காட்சியும் மனதை உலுக்குகின்றன. குழந்தைகளின் அழுகைகள், பசியால் வாடும் குழந்தைகளின் காட்சிகள், மருத்துவமனைகள் மீதான குண்டுவீச்சு, மற்றும் ஐ.நா. விசாரணைக் கமிஷனின் இனப்படுகொலை அறிவிப்பு ஆகியவை எந்த மனிதனும் ஒருபோதும் அனுபவிக்கக் கூடாத துன்பத்தை வெளிப்படுத்துகின்றன. அப்பாவி உயிர்கள் இவ்வாறு நசுக்கப்படும்போது, மௌனமாக இருப்பது ஒரு தேர்வாகாது. ஒவ்வொருவரின் மனசாட்சியும் எழ வேண்டும். இந்தப் பயங்கரத்தை முடிவுக்குக் கொண்டு வர உலகம் ஒன்றிணைய வேண்டும் என்பதை இந்தியா இன்னும் உறுதியான குரலில் பேச வேண்டும்”
என்று குறிப்பிட்டுள்ளார்.