
கேரள கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதால் அடுத்த 6 நாட்களுக்குத் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,
`வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரத்தன்மையுடன் இருந்தது. உள் தமிழகத்தின் அநேக இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
தெற்குக் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிச.28) தொடங்கி டிச.30 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.31-ல், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜன.1 முதல் ஜன.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.31 மற்றும் ஜன.1-ல் தேதிகளில், தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது’.