
வரும் பிப்ரவரி 1 முதல் ஆட்டோ பயணங்களுக்கு புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படும் என அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதிய ஆட்டோ கட்டணங்கள் தொடர்பாக விரிவான பட்டியல், அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்களின் பட்டியலை வெளியிட்ட அனைத்து ஆட்டோ சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.ஏ. ஜாஹிர் ஹுசைன், பொது மக்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த புதிய பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கி.மீ. வரை ரூ. 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கி.மீ. பயணத்திற்கு ரூ. 54 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 18 வசூலிக்கப்படும் எனவும், காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்துக்கு ரூ. 1.50 வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரவு நேரத்தில் (இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) பகல் நேர கட்டணத்தைவிட 50 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு தன்னிச்சையாக கட்டண நிர்ணய நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என தமிழக போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.