சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு கூடுதல் ரயில்கள் விடாதது ஏன்?

கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை ஏப்ரல் 1-ல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் தொடங்கப்படவில்லை.
சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு கூடுதல் ரயில்கள் விடாதது ஏன்?
2 min read

தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்காததன் பின்னணியில் சிந்தாதிரிப்பேட்டையுடன் ரயில் சேவை நிறுத்தப்படுவதும் காரணமாக இருக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினாவில் நேற்று இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். நிகழ்ச்சி முடிந்து மெரினாவிலிருந்து மக்கள் புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலால் மக்கள் திக்குமுக்காடினர். குறிப்பாக பறக்கும் ரயில் சேவை போதிய அளவில் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இதற்கு வழக்கமான நாள்களில் 55 ஆயிரம் பயணிகள் பறக்கும் ரயில் சேவையைப் பயன்படுத்துவார்கள். நேற்று மாலை 4.30 மணியளவில் விமான சாகச நிகழ்ச்சியால் ஏறத்தாழ 3 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது. 4-ம் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தபோதிலும், முடிந்தளவுக்குக் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், வழக்கமான நாள்களில் எவ்வளவு இடைவேளையில் ரயில் இயக்கப்படும், விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நேற்றைய தினத்தில் எவ்வளவு இடைவேளையில் ரயில்கள் இயக்கப்பட்டன என்பது குறித்து தெளிவு கிடைக்கவில்லை.

நிறைய பயணிகள் படியில் தொங்கிய படியும், ஜன்னலில் தொங்கிய படியும் பயணித்தக் காட்சிகள் அச்சமூட்டின. ரயில் தண்டவாளங்களில் நடந்து சென்றவர்களின் புகைப்படங்களும் வெளியாகின. இதனால், தெற்கு ரயில்வே விளக்கம் கொடுத்தபோதிலும் அதன் மீது விமர்சனங்கள் அழுத்தமாக வைக்கப்பட்டன.

கூடுதல் ரயில்கள் இயக்கப்படாததன் பின்னணியில் 4-ம் வழித்தட கட்டுமானப் பணிகள் காரணமாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. பறக்கும் ரயில் சேவையானது வேளச்சேரியிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரயில் வழித்தடங்கள் மட்டுமே இருப்பதால், வெளிமாநிலங்களிலிருந்து வரும் ரயில் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிக்காக கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையிலான பறக்கும் ரயில் சேவை கடந்தாண்டு ஆகஸ்ட் 2 அன்று ரத்து செய்யப்பட்டது. துறைமுகம் அருகே கடற்படைக்குச் சொந்தமான 110 மீட்டர் இடத்தை ரயில்வே நிர்வாகம் வாங்க முடிவு செய்தது. இதற்கு ஈடாக வேறொரு இடத்தில் இதே அளவிலான இடத்தைக் கடற்படைக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே மற்றும் கடற்படை இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, நிலங்களும் பரஸ்பரம் ஒப்படைக்கப்பட்டன.

இருந்தபோதிலும், கடற்படையிடமிருந்து பெறப்பட்ட இடத்தில் ரயில் தண்டவாளங்களை அமைக்க கடற்படை ஒப்புதல் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இந்தத் தாமத்தினால் 7 மாதங்களில் பணி நிறைவடையும் எனக் கூறப்பட்டு, பிறகு அக்டோபர் 1, 2024 முதல் பணிகள் நிறைவடையும் என நீட்டிப்பு செய்யப்பட்டது. அக்டோபர் 1-ஐ கடந்தும்கூட, இந்தப் பணிகள் இன்னும் நிறைவடைந்ததாகத் தெரியவில்லை. சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து கடற்கரை வரை ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

சிந்தாதிரிப்பேட்டையுடன் பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்படுவதால், கூடுதல் ரயில்களை இயக்குவதற்கானப் போதிய கிராஸிங் வசதி இல்லை என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கூடுதல் ரயில்களை இயக்காததற்குப் பின்னணியில் இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்பது தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in