

தாம்பரம் - செங்கல்பட்டு இடையில் ரூ.757 கோடி மதிப்பில் 4-வது ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் சென்னை - செங்கல்பட்டு ரயில் பாதை தமிழகத்தின் முக்கியமான ரயில் பாதையாகும். சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் இந்தப் பாதை வழியாகவே செல்கின்றன. குறிப்பாக கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதை வழியே நாள்தோறும் 60-க்கும் மேற்பட்ட அதிவிரைவு ரயில்கள், 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தைத் தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தின் பிரதானமான இந்த வழித்தடத்தில் சென்னை முதல் செங்கல்பட்டு வரை 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இதை விரிவுப்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து, தெற்கு ரயில்வேவுக்கு அதிக வருமானம் ஈட்டும் இந்த வழித்தடத்தில் புதிய ரயில்பாதை அமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று (அக்.22) தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதலாக 4-வது ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையில் 30.2 கிலோ மீட்டர் தூரத்தில் 4-வது ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் செலவு ரூ. 757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 4-வது ரயில் பாதை தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Railway Ministry has approved a Rs. 757.18 crore project to lay a fourth railway line between Tambaram and Chengalpattu, covering a distance of approximately 30.2 kilometers.